முகப்பு Sports அம்பத்தி ராயுடுவின் கிரிக்கெட் எதிர்காலம் வேண்டுமென்றே இருளுக்குள் தள்ளப்படுகிறதா?- இந்தியா ஏ, துலீப்டிராபி அணிகளில் இல்லை

அம்பத்தி ராயுடுவின் கிரிக்கெட் எதிர்காலம் வேண்டுமென்றே இருளுக்குள் தள்ளப்படுகிறதா?- இந்தியா ஏ, துலீப்டிராபி அணிகளில் இல்லை

592
0

ஹைதராபாத்தைச் சேர்ந்த திறமையான, அதிரடி பேட்ஸ்மேன் அம்பத்தி ராயுடு யோ-யோ டெஸ்டில் தோல்வி அடைந்ததால் இங்கிலாந்து செல்லும் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், இப்போது, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய ஏ அணி, துலீப் டிராபியில் விளையாடும் 3 அணிகளிலும் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

திறமையான பேட்டிங் இருந்தும் யோ-யோ டெஸ்ட்டில் தேர்வாகவில்லை என்ற ஒரு காரணத்தை மட்டும் வைத்து அம்பத்தி ராயுடுவின் எதிர்கால கிரிக்கெட் வாழ்க்கை இருளுக்குள் தள்ளப்படுகிறது.

யோ-யோ டெஸ்ட்டை மட்டும் வைத்து ஒருவீரரின் திறமையை மதிப்பிடக்கூடாது, பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங், சுறுசுறுப்பு உள்ளிட்டவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று சச்சின், கங்குலி உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், பிசிசிஐ திட்டமிட்டு அம்பத்தி ராயுடுவின் கிரிக்கெட் வாழ்க்கை அழிக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது.

You May Like This

தென் ஆப்பிரிக்க ஏ அணிக்கு எதிராக இந்திய ஏ அணி, இந்திய பி அணியின் டெஸ்ட் போட்டி, துலீப் டிராபில் இந்திய ப்ளூ, ரெட், கிரீன் அணிகள் மோதும் போட்டி ஆகியவற்றுக்கான அணி வீரர்களை பிசிசிஐ நேற்று அறிவித்தது. இதில் அனைத்திலும் அம்பத்தி ராயுடுவின் பெயர் இல்லை.

ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த ராயுடு, ஒரு சதம் உள்ளிட்ட 602 ரன்கள் சேர்த்தார். இவரின் ஸ்டிரைக் ரேட் 150 ஆக இருந்தது. இதை அடிப்படையாக வைத்து, இங்கிலாந்து செல்லும் இந்திய அணியல் ராயுடு சேர்க்கப்பட்டார்.

ஆனால், இந்திய அணி நிர்வாகம் அறிமுகம் செய்துள்ள யோ-யோ டெஸ்டில் தேர்வாகி 16.1 மதிப்பெண் பெற்றால் மட்டுமே அணிக்குள் வரமுடியும் என்ற நிலையில், ராயுடு அதில் தோல்வி அடைந்தார். இதனால், இங்கிலாந்து தொடருக்காக தேர்வு செய்யப்பட்டும் அணிக்குள் வரமுடியவில்லை.

இதையடுத்து, 6 வாரங்கள் அவகாசம் அளித்த இந்திய நிர்வாகம், யோ-யோ டெஸ்ட்டில் தேர்வாகி வருமாறு ராயுடுவிடம் கேட்டுக்கொண்டது.

ஆனால், தற்போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஜூனியர் டீமுக்கு பயிற்சிக்காக லண்டனில் இருப்பதால், தன்னால் யோ-யோ டெஸ்டில் பங்கேற்க இயலாது கூடுதல் அவகாசம் கேட்டு ராயுடு கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால், அதை ஏற்க மறுத்த பிசிசிஐ இந்தியா ஏ,பி, துலீப் டிராபி அணிகளில் அவரைச் சேர்க்காமல் அணி வீரர்களை அறிவித்துள்ளது என்று மும்பையில் இருந்து வரும் மும்பை மிரர் நாளேடு செய்தி தெரிவிக்கிறது.

கடைசியாகக் கடந்த 2016-ம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அம்பத்தி ராயுடு இந்திய அணிக்காக விளையாடினார். அதன்பின் அவருக்கு எந்தவிதமான வாய்ப்புகளும் பிசிசிஐ சார்பில் வழங்கப்படவில்லை.

2018 ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுச் சிறப்பாக ஆடியதால், ராயுடு இங்கிலாந்து தொடரில் வாய்ப்பு பெற்று யோ-யோ டெஸ்டில் தோல்வியால் வாய்ப்பை இழந்தார்.

உள்நாட்டுப்போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்டால் மட்டுமே வீரர்கள் இந்திய அணிக்குள் வாய்ப்பை பிடிக்க முடியும். அப்படி இருக்கும் போது, துலீப் டிராபியில் 3 அணிகள், இந்திய ஏ, பி, அணிகள் என எதிலாவது ஒன்றில் ராயுடுவை சேர்த்திருந்தால், நிச்சயம் அடுத்துவரக்கூடிய தொடரில் ராயுடுவுக்கு இந்திய அணியில் இடம் கிடைத்திருக்கும்.

ஆனால், யோ-யோ டெஸ்டில் பங்கேற்க கூடுதல் அவகாசம் கேட்டார் என்பதற்காக அவகாசம் வழங்காமல், அணி வீரர்களை பிசிசிஐ அறிவித்தது எந்தவிதத்தில் நியாயம்.

இங்கிலாந்து தொடருக்கு முன்பாக இந்திய வீரர்களுக்கு யோ-யோ டெஸ்ட் நடத்தப்பட்டபோது, ரோகித் சர்மாவுக்கு இருமுறை அழைப்பு விடுத்தும், அவர் சொந்த வேலை காரணமாக, அவகாசம் கேட்டு சென்றுவிட்டார். 3-வது முறையாக அவருக்குச் சாதகமான நேரத்தில் வந்து யோ-யோ டெஸ்டில் பங்கேற்றார்.

அதேபோன்ற அவகாசத்தை ராயுடுவுக்கு அளித்திருந்தால், சிறந்த பேட்ஸ்மேன் இந்திய அணிக்குக் கிடைத்திருப்பார். ஆனால், தென் இந்தியாவில் இருந்து எந்த வீரர்களுக்கும் முறையான வாய்ப்புகள் கிடைப்பதில்லை.

அவ்வாறு மறுக்க முடியாத திறமை இருந்து தேர்வு செய்யப்பட்டாலும், அவர்களை அணியில் பயன்படுத்தாமல் வைத்திருப்பது தொடர்ந்து இந்திய அணியில் நடக்கிறது என்பது ரசிகர்களின் குற்றச்சாட்டாக வைக்கப்படுகிறது.

அந்த வகையில் ஆந்திரா மாநிலம் குண்டூரைச் சேர்ந்த அம்பத்தி ராயுடுவுக்கும் வாய்ப்பு திட்டமிட்டு மறுக்கப்படுகிறதா எனத் தெரியவில்லை.

இந்திய அணியில் இதுவரை 34 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அம்பத்தி ராயுடு, 1055 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 2 சதம், 6 அரைசதங்கள் அடங்கும். 6 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ராயுடு, 42 ரன்கள் சேர்த்துள்ளார்.

You May Like This